தமிழ் English اردو

நான் ஏன் UCC ஐ நிராகரிக்கிறேன்?


பொது சிவில் சட்டம்

இந்தியாவிற்கு பொது சிவில் சட்டம் அவசியம் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. பலரும் இந்தியாவில் முஸ்லிம்கள் மட்டுமே தனிப்பட்ட சட்டத்தை அனுபவித்து வருகின்றனர் என்று எண்ணி, பொது சிவில் சட்டமானது முஸ்லிம்களையும் ஏனைய இந்தியர்களோடு ஒரே சட்டத்தின் கீழ் இணைத்து விடும் என தவறாக கருதுகின்றனர். ஊடகங்களும் பொது சிவில் சட்டம் பற்றிய செய்திகளிலும், விவாதங்களிலும் இந்த சட்டம் முஸ்லிம்களை மட்டுமே பாதிக்கிறது என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர். ஆனால் உண்மை இதற்கு நேர்மாற்றமானது.

இன்னும் சிலர் "ஒரு தேசம், ஒரே சட்டம்" தான் சரி என்று வாதிடுகின்றனர். பொது சிவில் சட்டம் தேவை என்பதை இந்திய அரசியல் சாசன சட்டமே கூறுகிறது ஆகவே அதனை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்கின்றனர்.

பாலையும் நீரையும் அன்னப்பறவை பிரிப்பது போல உண்மையையும் பொய்ப்பிரச்சாரங்களையும் பிரித்து விரிவாக பார்ப்போம்…

இந்தியர்களுக்கு என்ன செய்யும் இந்த பொது சிவில் சட்டம்?

இந்த பொது சிவில் சட்டமானது மத, இன, மொழி, கலாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து இந்திய குடிமகன்களுக்கும் ஒரே சட்டமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பரிந்துரை ஆகும்.

இந்த பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கு ஏற்புடையதா?

இதற்கு பதில் தெரிவதற்கு முன்னால் இந்த சட்டத்தை பற்றியும் அதன் பாதிப்புகளை பற்றியும் தெளிவான இன்னும் விரிவான புரிதல் வேண்டும். இதில் வேதனைப்படக் கூடிய விஷயம் என்னவென்றால் இந்த சட்டத்தை பற்றிய புரிதல் இல்லாமலேயே பலர் இதை எதிர்க்கவோ ஆதரிக்கவோ செய்கின்றனர்.

இந்தியர் அனைவருக்கும் குற்றவியல் சட்டம் பொதுவானதே!

இந்தியாவில் ஜாதி, மத, இன, மொழி, கலாச்சார பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு குற்றவியல் சட்டமானது அனைவர்க்கும் சமமானதே. உதாரணத்திற்கு கொலைகுற்றமோ, திருட்டோ அதை செய்தவர் யாராகினும் இந்துவோ, முஸ்லிமோ, சீக்கியரோ, கிறிஸ்தவரோ சட்டம் ஒன்றே.

இந்தியர் அனைவருக்கும் குடிமையியல் சட்டமும் சமமானதே!

ஜாதி, மத, இன, மொழி, கலாச்சார பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு குடிமையியல் சட்டமும் அனைவர்க்கும் சமமானதே. உதாரணத்திற்கு பொருளாதார, வணிக, நிதி தொடர்பானவை, வில்லங்கங்கள், சொத்து பிரச்சினைகள் இன்னும் இது போன்ற பலதரப்பட்ட பிரச்சினைகள் இவையனைத்திற்கும் ஒரே சட்டம் தான் அது அப்துல் காதரோ, அனந்த ராமனோ, அந்தோணியோ யாராகினும்.

தனிப்பட்ட உரிமை விவகாரங்களில் விதிவிலக்களிக்கப்பட்ட சட்டங்கள்

சில தனிப்பட்ட உரிமை விவகாரங்களில் மட்டும் அளிக்கப்பட்ட விதிவிலக்கு: திருமணம், விவாகரத்து, குடும்ப இன்னும் தத்தெடுத்தல் தொடர்பாக ஒவ்வொரு மத கோட்பாடுகளும் தனிப்பட்ட விதிகளை வகுத்துள்ளது.

இன்னும் தெளிவாக பார்த்தோமேயானால் இந்து தனிநபர் சட்டமானது வேதங்கள், ஸ்மிருதிகள், உபநிடதங்கள், ஆகமங்கள் இது போன்றவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே முஸ்லிம்களுக்கு அவர்களின் புனித வேதமான குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ் என்று சொல்லக்கூடிய இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல் மற்றும் வழிகாட்டல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதே போன்று கிறிஸ்தவர், யூதர், சீக்கியர், பார்ஸி, பௌத்தம் என ஏனையோரும் அவரவர்களின் மத கோட்பாடுகள், வேதங்களின் அடிப்படையில் தனிநபர் சட்டங்களை கொண்டுள்ளனர்.

பொது சிவில் சட்டம் எதை செய்ய முனைகிறது?

இந்த பொது சிவில் சட்டமானது, திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்ற ஒவ்வொரு தனிநபரின் கொள்கைகளையும் மீறி மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரே சட்டமாக கொண்டு வர திட்டமிடுகிறது.

பொது சிவில் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் தான் பாதிக்குமா?

இல்லை. இது அப்பட்டமான ஒரு பொய்ப்பிரச்சாரம். இது இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பௌத்தம், யூதம் இன்னும் சொல்லப்போனால் மலைவாழ் மக்கள், பழங்குடியினர் என அனைவரையுமே பாதிக்கும். இது முஸ்லிம்களை மட்டும் பாதிக்கக்கூடியது அல்ல.

பழங்குடியினர் மற்றும் பௌத்தர்கள் கடுமையாக இதனை எதிர்க்கின்றனர்

பொது சிவில் சட்டம் VS முஸ்லிம் தனிநபர் சட்டம்

மத, இனங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒரே சட்டம் என இந்த போது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது வெளிப்படையாக பார்க்கும் பொழுது சரியானது போன்றே தோன்றும். ஆனால் அது ஒரு மாயை. இதனை ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அதிலுள்ள சட்ட சிக்கல்கள் நடைமுறை சிக்கல்களை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் மூலம் கிடைக்கும் சலுகைகள்

நான்கு வரையறைகள் முஸ்லிம் தனிநபர் சட்டம் கொண்டுள்ளது. அவை:

  1. திருமணம்
  2. விவாகரத்து
  3. வாரிசுரிமை
  4. வக்ஃப் அமைப்பு (வக்ஃப் என்பது பொது சேவை செய்வதற்காக முஸ்லிம் கொடையாளர்களால் கொடுக்கப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்களை நிர்வகிக்கும் அமைப்பு. இது வக்ஃப் சட்டம் 1995ன் கீழ் மத்திய அரசால் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு).

மேலே, வரையறுக்கப்பட்ட இந்த நான்கினை தவிர அனைத்து குடிமையியல் நகர்வுகள், சட்டங்கள் அனைத்தும் ஏனைய இந்திய குடிமகன்களைப்போலவே எந்தவித சிறப்பு சலுகைகளும் இன்றி பின்பற்றப்படும்.

இஸ்லாமிய திருமண சட்டம் கலப்பு திருமணங்களுக்கு செல்லாது

ஒரு முஸ்லிமான ஆணோ, பெண்ணோ மற்ற மதத்தை சார்ந்தவரை திருமணம் அல்லது விவாகரத்து செய்யும் பொழுது "சிறப்பு திருமண சட்டத்தின்" கீழ் வருமே தவிர முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் அல்ல.

முஸ்லிம் தனிநபர் சட்டம் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு பொருந்தாது

குற்றவியல் சட்டமானது அனைத்து இந்திய குடிமகன்களுக்கும் உள்ளதைப்போலவே முஸ்லிம்களுக்கும் பொதுவானது. குற்ற நடவடிக்கை புரியும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் தனி சட்டமோ, சலுகையோ கிடையாது.

முஸ்லிம் தனிநபர் சட்டம் நசுக்கப்படுவதால் இந்துக்களுக்கோ மற்ற மதத்தவருக்கோ என்ன பயன்?

முஸ்லிம் தனிநபர் சட்டம் நீக்கப்படுவதால் இந்துக்களுக்கோ அல்லது மற்ற மதத்தவர்களுக்கோ எந்த பயனுமில்லை. ஏன்?

முஸ்லிம் தனிநபர் சட்டம் பின்வருவனவற்றிற்கே பொருந்தும்:

  1. முஸ்லிம்களுக்கிடையே திருமணம் நடக்கிறது,
  2. விவகாரத்தும் இவர்களுக்கிடையே,
  3. முஸ்லிம்களுக்கு பிறந்த பொருந்தும் வாரிசுரிமை,
  4. முஸ்லிம்களுக்காகவே உள்ள சொத்துக்களை பராமரிக்கும் வக்ஃப் அமைப்பு

இந்த உரிமைகளை பறிப்பதன் மூலம் இந்துக்களோ அல்லது மற்ற மதத்தவரோ ஏன்? நாம் பெருமிதம் கொள்ளும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய தேசமோ எதையும் பெறப்போவதுமில்லை! இழக்கப்போவதுமில்லை!

இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பட்டியலின மக்கள் அனுபவிக்கும் சிறப்பு சலுகைகள்

இந்து கூட்டுக்குடும்ப சட்ட வரியமைப்பு மூலமாக இந்துக்கள் அனுபவிக்கும் சலுகை

இந்து தனிநபர் சட்டத்தின் கீழ் இந்து கூட்டுக்குடும்பத்தை அமைப்பதின் மூலம் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் ஆகியோர் இந்து கூட்டுக்குடும்ப வரியமைப்பு சலுகையை பெற முடியும். இதனடிப்படையில் வரி சேமிப்பு திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

See: https://cleartax.in/s/huf-hindu-undivided-family

இந்த திட்டமானது இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், மற்றும் பௌத்தர்களுக்கு மட்டுமே வரி சேமிக்கும் முகமாக பொருந்தும். முஸ்லிம், கிறிஸ்தவ, இன்னும் ஏனைய பிற மதத்தவருக்கு இது பொருந்தாது.

எங்கேனும் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கும் கூட்டத்தினர் இதைப்பற்றி பேசியதுண்டா?

பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த சலுகைகள் என்னவாகும்?

இந்து திருமண சட்டம் 1995 பட்டியலின மக்களுக்கு பொருந்தாது

இந்துவாக கருதப்படும் பட்டியலின மக்களுக்கே இந்த இந்து திருமண சட்டம் 1995 பொருந்தாது.

இச்சட்டத்தின் உட்பிரிவுகள் எதுவும் பட்டியலின மக்களுக்கு பொருந்தாது.

ஆதாரம்: https://indiankanoon.org/doc/1922953/

ஜார்கண்ட் உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்:

இரு பழங்குடியின மனுதாரர்களும் தாங்கள் இந்துக்களாகவே ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் அவர்களுடைய திருமணம் பழங்குடியினர் மரபின்படி நடந்திருக்குமானால் அது இந்து திருமண சட்டம் 1995-ன் 4-ம் விதி உட்பிரிவுகள் 2(2) சட்டத்திற்கு அப்பாற்பட்டது மட்டுமின்றி இந்த வழக்கு பழங்குடியினர் மரபுச் சட்டங்களின் கீழ் மட்டுமே விசாரிக்கப்படும்.

ஆதாரம்: https://indiankanoon.org/doc/169899294/ 

பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டால் பழங்குடியினரின் இந்த சிறப்பு சலுகை என்னவாகும்?

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 44?

பொது சிவில் சட்டத்தைப் பற்றிய விளக்கத்தை இந்திய அரசியலமைப்புச் சாசன சட்டப் பிரிவு 44 பின்வருமாறு விளக்குகிறது.

இந்த சட்டப்பிரிவு 44 "வழிகாட்டு நெறிமுறை/கொள்கைகள்" என்ற உட்பிரிவின் கீழ் வருகிறது. "வழிகாட்டு நெறிமுறைகள்/ கொள்கைகள்" என்ற பிரிவின் கீழ் வரக்கூடிய அனைத்து சட்டங்களும் நீதிமன்றங்களால் திணிக்கப்பட இயலாது மாறாக அரசாங்கம் சட்டமியற்ற பரிந்துரைக்கலாம்.

இந்திய அரசியலமைப்புச் சாசனம் பொது சிவில் சட்டத்தை மட்டுமா பேசுகிறது?

பொது சிவில் சட்டத்தை மட்டுமின்றி வழிகாட்டு நெறிமுறைகள்/ கொள்கைகள் பின்வரும் மேலும் பல பின்வருவனவற்றையும் பரிந்துரைக்கிறது:

  1. சட்டப்பிரிவு 47 - மதுவிலக்கு மற்றும் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதார தரத்தை மேம்படுத்துதல்

சட்டப்பிரிவு 47:

இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 47 (Article 47) என்பது மாநிலங்கள் தங்கள் மக்களின் ஊட்டச்சத்து, பொது சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் போன்றவற்றினை அடிப்படைக் கடமையாகக் கொண்டு மேம்பாடு அடையச் செய்வதற்காக இயற்றப்பட்ட பிரிவு ஆகும். மேலும், மருத்துவ பயன்பாட்டுக்கேயன்றி ஏனைய பிற மக்களின் உடல்நலனிற்குத் தீங்கு விளைவிக்கும் போதைப் பொருள் மற்றும் மருந்துகளை தடைசெய்யவும் இந்த பிரிவு வழிவகுக்கிறது.

  • நம் நாட்டு மக்களின் ஊட்டச்சத்தின் நிலை என்ன?
  • நம் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தின் நிலை என்ன?
  • பொது மக்களின் சுகாதார கட்டமைப்பு எந்தளவில் உள்ளது?
  • பொது சிவில் சட்டத்தை ஆதரித்து பேசும் எத்தனை அரசியல்வாதிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்?
  • பொது மக்களின் சுகாதாரத்தை பெரிதளவு பேசும் இந்தப்பிரிவினை ஏன் கணக்கில் எடுக்கவில்லை?
  • அனைத்து மாநிலங்களிலும் மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளதா இந்த அரசாங்கம்?

2. சட்டப்பிரிவு 38 "வருமானத்தின் அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் மற்றும் தகுதி, வசதிகள் மற்றும் வாய்ப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றுதல்" பற்றி பேசுகிறது.

சட்டப்பிரிவு 38:

குறிப்பாக, வருமானத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க அரசு பாடுபடுவதுடன், தனிநபர்கள் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அல்லது பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்கள் சமுதாய குழுக்களிடையேயும் அந்தஸ்து, வசதிகள் மற்றும் வாய்ப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைய முயற்சி செய்ய வேண்டும்.

சட்டப்பிரிவு 38

யதார்த்தம் என்ன?

மே 2022 இல் பிரதம மந்திரி பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்ட, இந்தியாவின் சமத்துவமின்மை நிலை அறிக்கையின்படி, நீங்கள் ரூ. 25,000 அல்லது அதற்கு மேல் சம்பளம் வாங்கினால், இந்தியாவில் சம்பாதிக்கப்பட்ட மொத்த ஊதியத்தில் மேல்தட்டு 10% இல் உங்கள் ஊதியத்தின் தரம் இருக்கும்.

இந்தியாவின் 1% பணக்காரர்கள் நம் நாட்டின் மொத்த செல்வத்தில் 58% ஐயும், மேல் தட்டு 10% மக்கள் நமது நாட்டின் செல்வத்தில் 73% ஐயும் வைத்துள்ளனர்.

பிரிவு 38 மற்றும் 47 ஆகியவை பொது சிவில் சட்டத்தை வழிகாட்டும் அதே "வழிகாட்டுதல் கொள்கைகள் / கோட்பாடுகளின்" கீழ் வருகின்றன.

சட்டப்பிரிவு 44 பற்றி பேசுபவர்கள் அனைவரும் ஏன் சட்டப்பிரிவு 38 மற்றும் 47 பற்றி அமைதியாக இருக்கிறார்கள்?

இதை வாசிக்கும் ஒவ்வொருவரிடமும் கேட்கிறோம். எது இந்திய மக்களுக்கு மிகவும் முக்கியமானது?

சிறந்த ஊட்டச்சத்து, வாழ்க்கைத் தரம், சிறந்த சுகாதார உள்கட்டமைப்பு, வருமான ஏற்றத்தாழ்வைக் குறைப்பதா?

அல்லது திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசுரிமைக்கு அனைவரையும் ஒரே சிவில் சட்டத்தைப் பின்பற்றச் செய்வதா?

இந்தியாவிற்கான பொது சிவில் சட்டத்தின் மீதான சட்ட ஆணையம்

இந்த சட்ட ஆணையம் ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையிலான சட்ட வல்லுனர்களைக் கொண்ட குழு. சட்ட சீர்திருத்தம் குறித்து அவர்கள் ஆய்வு செய்து இந்திய அரசுக்கு ஆலோசனை வழங்குபவர்கள். 2016 ஆம் ஆண்டில், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், இந்தியாவின் 21வது சட்ட ஆணையத்திடம், பொது சிவில் சட்டம் தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டது. 2 வருட ஆய்வுக்குப் பிறகு, சட்ட ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

சட்ட ஆணையத்தின் தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பல்பீர் சிங் சவுகான் கூறியதாவது:

பொது சிவில் சட்டம் சாத்தியமில்லை. அது ஒரு விருப்பமும் இல்லை. ஏனென்றால் தனிநபர் சட்டங்கள் இந்திய அரசியல் சாசன சட்டம் 25வது பிரிவின் கீழ் அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும், மேலும் அவற்றை ஒருபோதும் முறியடிக்க முடியாது. இது தவறான புரிதல். அரசியலமைப்பை மீறும் வகையில் யாராவது சட்டம் கொண்டு வந்தாலும், அது முறியடிக்கப்படும்.

நீதிபதி பல்பீர் சிங் சவுகான்

பார்க்க:  https://www.news18.com/news/india/uniform-civil-code-is-not-possible-its-not-even-an-option-law-commission-chairman-1595623.html 

பொது சிவில் சட்டம் பற்றி டாக்டர் அம்பேத்கர்

நமது அரசியலமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்:

வருங்கால பாராளுமன்றம் ஒரு பொது சட்டத்தை உருவாக்க ஏற்பாடு செய்வது முற்றிலும் சாத்தியம், இருப்பினும் மனமுவந்து இச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பவர்களுக்கு மட்டுமே இச்சட்ட வழிமுறை பொருந்தும், எனவே ஆரம்ப கட்டத்தில் இச்சட்ட வழிமுறை முழுக்க முழுக்க தானாகவே வழிவந்து ஏற்றுக்கொள்வதின் அடிப்படையிலேயே அமல்படுத்த முடியும்.

அரசியல் நிர்ணய சபை விவாதங்கள், தொகுதி VII, 3 டிசம்பர் 1948

இந்த கூற்றை நன்கு கவனித்தால், டாக்டர் அம்பேத்கர், தாமாகவே முன்வந்து ஏற்பவர்களுக்கு மட்டுமே பொது சிவில் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பினார் என்பது புலப்படும். நமது அரசியலமைப்பின் தந்தையுடைய இந்த அறிவார்ந்த கூற்றை நாம் எவ்வாறு புறக்கணிக்க முடியும்?

"ஒரே நாடு, ஒரே சட்டம்" - ஒரு மாயை

முஸ்லிம்களுக்கான தனிச் சட்டத்தை நீக்கினால், நாடு முழுவதும் ஒரே சட்டம் கொண்டு வரப்படும் என்று பலர் நினைக்கிறார்கள். அவர்கள் அரசியலமைப்பை கவனமாகப் படித்தால், இந்திய சமூகத்தின் பல முஸ்லிம் அல்லாத பிரிவுகளுக்கு விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

பிரிவுகள் 371 (A) முதல் (I) மற்றும் இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை 244(2) மற்றும் 275(1) ஆகியவற்றின் கீழ் அஸ்ஸாம், நாகாலாந்து, மிசோரம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு குடும்ப சட்டத்தை பொறுத்தவரை சில விதிவிலக்குகளை வழங்குகிறது சட்டம்.

சட்டப்பிரிவு 371A ஐப் பார்ப்போம்.

இந்திய அரசியலமைப்பின் 371 ஏ, நாகாலாந்து மாநிலத்திற்கு விதிவிலக்கு அளிக்கிறது:

(i) நாகர்களின் மத அல்லது சமூக நடைமுறைகள்,
(ii) நாகா பாரம்பரிய சட்டம் மற்றும் நடைமுறை, ,
(iii) நாகா மரபுச் சட்டத்தின்படி முடிவுகளை உள்ளடக்கிய சிவில் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம், மற்றும்
(iv) நிலம் மற்றும் அதன் வளங்களின் உரிமை மற்றும் பரிமாற்றம்

மற்ற வடகிழக்கு மாநிலங்களில் உள்ளவர்களுக்கும் இதே போன்ற விதிவிலக்குகள் வழங்கப்படுகின்றன.

குற்றவியல் நடைமுறையில் விலக்கு அளிக்கும் நம் அரசியல் சாசனம்

குற்றவியல் நடைமுறையில் நமக்கு விதிவிலக்குகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), 1973, நாகாலாந்து மாநிலத்திற்கும் பழங்குடியினப் பகுதிகளுக்கும் பொருந்தாது. “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்று சொல்பவர்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கான அனைத்து கிரிமினல் மற்றும் சிவில் விதிவிலக்குகளையும் நீக்குவோம் என்று பகிரங்கமாக அறிவிப்பார்களா?

விபச்சார பயன்பாடுக்காக சட்டவிரோத ஆள்கடத்தல் (தடுப்பு) சட்டம், 1956 (சட்டம்/ITPA) விபச்சாரத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆனால், மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்கள் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக "சிவப்பு விளக்கு" பகுதிகள் மூலம் அனுமதித்துள்ளன. நாட்டின் பல பகுதிகளில், விபச்சாரம் சட்டவிரோதமானது. "ஒரே தேசம், ஒரே சட்டம்" என்ன ஆனது என்று எவரேனும் ஆட்சேபனம் செய்கிறார்களா?

குறிப்பு: விபச்சாரத்திற்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் வழங்கப்படும் தண்டனை வேறு என்பது உங்களுக்குத் தெரியுமா? விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணுக்கு 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு 7 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். இது பாலின சமத்துவமா அல்லது பாலின பாகுபாடா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

மதச்சார்பற்ற நாடு மத அடிப்படையில் சிறப்பு சலுகைகளை அனுமதிக்க முடியுமா?

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதால், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு சிறப்பு சலுகைகளை அனுமதிக்க முடியாது என்று பலர் வாதிடுகின்றனர். ஆனால் இங்கு யதார்த்தம் என்பதே வேறு.

சீக்கியர்கள் சிறப்பு சலுகைகளை அனுபவிக்கின்றனர்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது பிரிவு, அனைத்து குடிமக்களுக்கும் "அமைதியாகவும் ஆயுதம் ஏதுமின்றி ஒன்றுகூடுவதற்கு" உரிமை உண்டு என்று கூறுகிறது. இருப்பினும், சீக்கியர்கள் தங்கள் மத நம்பிக்கைகள் காரணமாக குறு வாள்களை எடுத்துச் செல்வதில் விதிவிலக்கு உள்ளது.

இந்திய அரசியலமைப்பின் 25வது பிரிவு கூறுகிறது:

குருவாள்களை அணிவதும் எடுத்துச் செல்வதும் சீக்கிய மதத்தின் செயல்பாடுகளில் ஓர் அங்கமாக கருதப்படும்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25

சீக்கியர்கள் விமான நிலையத்தில் கூட குருவாள்களை எடுத்துச் செல்லலாம்.

பார்க்க: https://www.indiatoday.in/india/story/sikhs-kirpan-allowed-within-airports-aviation-security-curved-dagger-1925251-2022-03-14

பொது சிவில் சட்டம் என்ற பெயரில் சீக்கியர்களுக்கான இந்த விதியை அங்கீகாரத்தை நம் அரசாங்கம் ரத்து செய்யுமா?

பொதுவெளியில் நிர்வாணமாக இருப்பதற்கு திகம்பர ஜெயின் துறவிகள் மற்றும் சாதுக்களுக்கு உள்ள விதிவிலக்கு

இந்திய தண்டனைச் சட்டத்தின் 294வது பிரிவு ஆபாசமான செயல்கள் அல்லது பொது இடங்களில் பேசப்படும் தகாத வார்த்தைகளுக்கு தண்டனை வழங்குகிறது. ஆனால் பொது வெளியில் நிர்வாணமாக இருப்பதற்கு திகம்பர ஜெயின் துறவி மற்றும் சாதுக்களுக்கு விதிவிலக்கு உள்ளது.

ஹரியானா மாநில சட்டசபையில் ஜெயின் துறவியும் மத தலைவருமான தருண் சாகர் நிர்வாணமாக 40 நிமிட உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jain monk naked in Haryana Assembly
Naked Sadhus at Kumbmela
கும்பமேளாவில் நிர்வாண சாதுக்கள்

இங்கே இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 294 என்ன ஆனது?

இது மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட விதிவிலக்கு ஆகாதா?

"சந்தாரா" என்று அழைக்கப்படும் ஜெயின் சடங்குகளுக்கு உள்ள விதிவிலக்கு

"சந்தாரா" என்பது ஜைன மத நடைமுறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் ஒரு முறை ஆகும். "சந்தாரா" சடங்கை தற்கொலையுடன் ஒப்பிட்ட உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை மாண்புமிகு உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

பார்க்க: https://www.thehindu.com/news/national/Supreme-Court-lifts-stay-on-Santhara-ritual-of-Jains/article60295094.ece

இது ஜைனர்களுக்கு அவர்களின் மதத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட சிறப்புச் சலுகை அல்லவா?

கோவா சிவில் சட்டப்படி இந்து ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம்

கோவாவின் இந்து பண்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்கள், 1880 இன் சட்ட விதி 3ன் படி சில நிபந்தனைகளின் கீழ் இந்து ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கிறது:

1) முதல் மனைவிக்கு 25 வயது வரை குழந்தைகள் இல்லை
2) முதல் மனைவிக்கு ஆண் குழந்தைகள் இல்லை, அவளுக்கு 30 வயது முடிந்துவிட்டது.

குறிப்பு: ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது பாலின சமத்துவமா அல்லது பாலின பாகுபாடு? நீங்களே முடிவு செய்யுங்கள்.

இந்து ஆண்களுக்கு பலதார மணம் செய்வதைத் தடை செய்யும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்து திருமணச் சட்டம் ஆகிய இரண்டிற்கும் இந்த சிறப்பு அனுமதி தெளிவாக முரணானது. கோவாவின் சிவில் சட்டம் மற்ற மதங்களைச் சேர்ந்த ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ள அனுமதிக்காது என்பதையும் ஒருவர் கவனிக்க வேண்டும்.

இது இந்து ஆண்களுக்கு அவர்களின் மதத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட சிறப்புச் சலுகை அல்லவா?

இது பொதுவெளியில் கடைசியாக எப்போது விவாதிக்கப்பட்டது?

இந்து தனிநபர் சட்டம் மற்றும் தென்னிந்திய திருமணங்கள்

இந்து திருமணச் சட்டம், 1955 இன் பிரிவு 2 (g) மாமா தனது இரத்த உறவுவழி மருமகளைத் திருமணம் செய்ய தடை விதிக்கிறது. சட்டம் கூறுகிறது:

தடைசெய்யப்பட்ட உறவின் அளவீடு:- இரண்டு நபர்கள் தடைசெய்யப்பட்ட உறவின் எல்லைக்குள் இருப்பதாகக் கூறப்படுகிறது (iv) இருவரும் சகோதரர் மற்றும் சகோதரி, மாமா மற்றும் மருமகள், அத்தை மற்றும் மருமகன், அல்லது சகோதரர் மற்றும் சகோதரியின் குழந்தைகள் அல்லது இரண்டு சகோதரர்கள் அல்லது இரண்டு சகோதரிகளின் குழந்தைகள். ;

இந்து திருமணச் சட்டம், 1955 இன் பிரிவு 2 (g)

பார்க்க: https://indiankanoon.org/doc/590166/ 

தென்னிந்தியாவில், மாமன் மற்றும் மருமகளுக்கு இடையே திருமணங்களை நடத்துவது இந்துக்களின் பொதுவான வழக்கம்.

பொது சிவில் சட்டம் என்ற பெயரில், இந்த திருமணங்கள் இந்து தனிநபர் சட்டத்திற்கு எதிரானவை என்பதால் ரத்து செய்ய வேண்டுமா?

தென்னிந்திய இந்துக்கள் இந்து தனிநபர் சட்டத்திற்கு கட்டுப்பட்டு மாமா, மருமக்களுக்கு இடையே திருமணங்களை நடத்தக் கூடாது என்று கட்டாயப்படுத்த முடியுமா?

பாலின சமத்துவம் மற்றும் தனிநபர் சட்டங்கள்

பொது சிவில் சட்டத்தைக் கோருபவர்கள், முஸ்லிம் தனிநபர் சட்டங்கள் பாலின சமத்துவத்திற்கு எதிரானவை, எனவே எங்களுக்கு பொது சிவில் சட்டம் தேவை என்று கூறுகின்றனர். இந்த விஷயத்தில் உண்மை என்னவென்றால், இந்து தனிநபர் சட்டங்களின் சில பிரிவுகளும் பாலின சமத்துவத்திற்கு எதிரானவை.

குறிப்பு: இஸ்லாமிய சட்டத்தில் பாலின சமத்துவம் பற்றிய பிரச்சினை விரிவான பார்வையில் விளக்கப்பட வேண்டும். எனவே இந்த கட்டுரையில் சேர்க்கப்படவில்லை.

இந்து தனிநபர் சட்டத்தின்படி:

  1. கணவருடன் வசிக்கும் திருமணமான பெண்கள் சொந்தமாக குழந்தையை தத்தெடுக்க முடியாது.
  2. இந்து விதவைகளுக்கு மாமியார் மற்றும் பெற்றோரிடமிருந்து மிகக் குறைந்த பராமரிப்பு உரிமைகளே உள்ளன.

கணவனின் பெற்றோருடன் வாழ மறுத்த பெண்ணிடமிருந்து இந்து ஆண் ஒருவருக்கு மாண்புமிகு உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது:

ஒரு இந்து சமுதாயத்தில், பெற்றோரைப் பராமரிப்பது மகனின் புனிதமான கடமையாகும். மேலும், “இந்தியாவில் ஒரு இந்து மகன், மனைவி மற்றும் திருமணம் செய்துகொண்டதன் பெற்றோரிடமிருந்து பிரிந்து செல்வது பொதுவான நடைமுறையோ அல்லது விரும்பத்தக்க கலாச்சாரமோ அல்ல. குறிப்பாக குடும்பத்தில் அந்த ஒரு மகன் மட்டுமே சம்பாதிக்கும் ஒருவராக இருக்கும்போது.

அக்டோபர் 6, 2016 அன்று நரேந்திர vs கே.மீனா

பார்க்க: https://indiankanoon.org/doc/130314186/


கண்ணியமிக்கோர்களே! இதை வாசிக்கும் உங்களிடம் நாங்கள் கேட்கிறோம்:

  1. திருமணம் மற்றும் விவாகரத்தில் மதம் தலையிட முடியாது என்றால், மாண்புமிகு நீதிபதிகள் ஏன் "இந்து சமுதாயம்" மற்றும் "இந்து மகன்" என்று குறிப்பிட்டார்கள்?
  2. அந்த மனிதன் இந்து அல்லாதவனாக இருந்திருந்தால், தீர்ப்பு அப்படியே அதுவாகவே இருக்குமா?
  3. ஒரு இந்து மனைவி தன் பெற்றோருடன் வாழ மறுக்கும் கணவனிடம் விவாகரத்து கேட்டால் அதே தீர்ப்பு வருமா?

இந்து வாரிசு சட்டம் மற்றும் பாலின சமத்துவம்

இந்து வாரிசுரிமைச் சட்டம், 1955ன் கீழ், மனைவி ஒரு கூட்டுக்குடும்ப வாரிசு அல்ல.

குறிப்பு: ஒரு கூட்டுக்குடும்ப வாரிசு குடும்பத்தில் உள்ள மற்றவர் இரத்த உறவு வாரிசுகளுடன் சமமான பங்கை அனுபவிப்பவர்.

சொத்து முதலில் Class-I முதல்நிலை வாரிசுகளுக்கும், அப்படி எவரும் இல்லை என்றால், Class-II இரண்டாம் நிலை வாரிசுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மகன்களின் வாரிசுகள் Class-I எனக் கருதப்படுகிறார்கள். ஆனால் மகள்களின் பிள்ளைகள் வாரிசுகள் இல்லை. வகுப்பு-II வாரிசுகளில் கூட, ஆண் வழிவந்த பிள்ளைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

கணவன் மனைவி இருவரும் சுயமாக சம்பாதித்த சொத்தானது அந்த இந்து தம்பதியினர் குழந்தை இல்லாதவர்களாக இருந்தால், மருமகளைத் துரத்தி விட்டாலும் கணவரின் பெற்றோருக்கே போய் சேரும். மனைவியின் பெற்றோருக்கு, குழந்தை இல்லாத அந்த பெண்ணின் சொத்தில் இருந்து எதுவும் கிடைக்காது.

இது பாலின சமத்துவமா அல்லது பாலின பாகுபாடா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

பலதார மணம் - முஸ்லிம் ஆண்கள் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை திருமணம் செய்கிறார்கள் - ஒரு கட்டுக்கதை

முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் காரணமாக, முஸ்லிம் ஆண்களுக்கு பலதார மணம் செய்யும் சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர். முஸ்லிம் ஆண்கள் மட்டுமே பலதார மணம் புரிகிறார்கள் என்பது ஒரு கட்டுக்கதை. அப்பட்டமான பொய்.

பலதார மணம் குறித்த அரசாங்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, முஸ்லிம்களை (5.7%) விட இந்துக்கள் (5.8%) அதிகமாக பலதார மணம் புரிகிறார்கள். ஆதிவாசிகள் (பலர் இந்துக்கள்) பலதார மணம் புரிவதில் அதிகமாக15.25% சதவீதத்தைக் கொண்டுள்ளனர்.

Polygamy Census - 1991
பலதாரமணம் கணக்கெடுப்பு -1991 Scroll.in

பார்க்க: https://scroll.in/article/669083/muslim-women-and-the-surprising-facts-about-polygamy-in-india

பழங்குடியினரான முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் ஒரே நேரத்தில் மூன்று பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்

Tribal man marries three
பழங்குடியின ஆண் மூன்று பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்
Tribal man marriage Invitation
திருமண அழைப்பிதழ்

ஒற்றுமையா அல்லது ஒரே மாதிரியாகவா?

இந்த கேள்விக்கு பதிலளிக்க, மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் பார்ப்போம்.

இந்தியாவில் மதச்சார்பின்மையின் சாராம்சம், பல்வேறு மொழிகள் மற்றும் பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட பல்வேறு வகையான மக்களை அங்கீகரித்து பாதுகாத்து, அவர்களை ஒன்றாக இணைத்து, ஒரு முழு ஐக்கிய இந்தியாவை உருவாக்குவதாகும். சட்டப் பிரிவு விதிகள் 29 மற்றும் 30, நிலவும் வேறுபாடுகளைப் பாதுகாத்தல் அதே நேரத்தில், ஒரு வலுவான தேசத்தை உருவாக்க மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்கு மேலாக வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.

T.M.A Pai Foundation v. கர்நாடகா மாநிலம் மற்றும் Ors

பார்க்க: https://indiankanoon.org/doc/512761/

ஒன்றுபட்ட தேசமாக இருப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு நல்ல உதாரணம் அமெரிக்கா. அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி அரசியலமைப்பு மற்றும் தனி குற்றவியல் சட்டங்கள் உள்ளன. இது அந்த நாட்டை எந்த வகையிலும் பலவீனப்படுத்தவில்லை அல்லது அதன் ஒற்றுமை அல்லது ஒருமைப்பாட்டைப் பாதிக்கவில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணுவதில் பொது சிவில் சட்டத்திற்கு எந்தப் பங்கும் இல்லை.

ஒரே மாதிரியான குடிமைச் சட்டம் அனைத்து மதத்தினரையும், அவர்கள் புனிதமானதாகக் கருதும் நடைமுறைகளையும் பாதிக்கும் என்பதால், பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிறைய எதிர்ப்புகளும் கருத்து வேறுபாடுகளும் உள்ளது. இது கடந்த 75 ஆண்டுகளாக இந்தியர்களாகிய நாம் கொண்டாடி வரும் "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற கொள்கையை கடுமையாக பாதிக்கலாம் இன்னும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்.

ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற பெயரில், சீக்கியர்கள் குருவாள்களை எடுத்துச் செல்ல கூடாது என்று சொன்னால், அவர்களின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஒன்றுபோலவே இருப்போம் என்ற பெயரில், ஆதிவாசிகளுக்கு வழங்கப்பட்ட விதிவிலக்குகள் பறிக்கப்பட்டால், அவர்களின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

தெளிவின்மையின் உச்சம்

அரசாங்கம் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தால், இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்கள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவர்களின் தனிப்பட்ட சட்டங்கள் என்னவாகும்? அவை முழுமையாக ரத்து செய்யப்படுமா? பொது சிவில் சட்டத்தை உருவாக்க அனைத்து தனிநபர் சட்டங்களிலிருந்தும் சிறந்த சட்டங்கள் எடுக்கப்படுமா? ஆம் எனில், ஒவ்வொரு தனிநபர் சட்டத்திலும் "எது சிறந்தது" என்பதை தீர்மானிப்பதற்கான அளவுகோல் என்னவாக இருக்கும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லை.

அரசாங்கம் பொது சிவில் சட்டத்தைப் பற்றி நீண்ட காலமாகப் பேசிக் கொண்டிருந்தாலும், அவர்கள் பொது சிவில் சட்டத்தின் “வரைவை” சமர்ப்பிக்கவில்லை அல்லது சீரான குடிமைச் சட்டத்தை எவ்வாறு உருவாக்கி அதைச் செயல்படுத்தப் போகிறோம் என்பதை விளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்தியர்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்கள்?

சிறந்த சுகாதார மருத்துவ கட்டமைப்பு, அனைவருக்கும் இலவசக் கல்வி, வறுமை ஒழிப்பு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற முக்கியமான மற்றும் அழுத்தமான விஷயங்கள் காலத்தின் தேவையும் கட்டாயமும் ஆகும். எனவே உடனடியாக இவற்றில் கவனம் செலுத்துவது இன்றியமையாத தேவை ஆகும். இதைவிடுத்து நமக்கு திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசுரிமை போன்ற தனிநபர் விவகாரங்கள் தொடர்பான சட்டங்கள் அல்ல.

சிறந்த சுகாதாரம் மற்றும் மருத்துவம், மதுவிலக்கு, வருமான சமத்துவமின்மையை ஒழித்தல் போன்ற முக்கிய விஷயங்களை நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 38 மற்றும் 47வது சட்டப்பிரிவு விதிகள் பேசுகின்றன என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

ஆனால், பொது சிவில் சட்டத்தை ஆதரிப்போர் இதுபோன்றவற்றை பேசுவதில் மிகப்பெரும் கள்ள மவுனம் காக்கின்றனர்.

இந்த விஷயங்களில் உடனடி கவனம் தேவையா? அல்லது பொது சிவில் சட்டம் தேவையா?

நீங்களே தீர்ப்பெழுத்துங்கள்!


மொழிபெயர்ப்பு: அப்துல் பாரி ஷா ஹமீத் | Article Source: CuriousHats